Friday, November 16, 2018

தினம் ஒரு பாசுரம் - 85

தினம் ஒரு பாசுரம் - 85

இன்று (16 நவம்பர் 2018) பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாமவரான, திருக்கடல்மல்லை எனும் மாமல்லபுரத்தில் தோன்றிய, இரண்டாம் திருவந்தாதி என்ற பிரபந்தத்தை அருளிய பூதத்தாழ்வார் அவதரித்த திருநட்சத்திரம் (ஐப்பசியில் அவிட்டம்). அவரது பாசுரம் ஒன்றை நோக்குவோம்.





அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின்
          துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான் - மூத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
          இறையாவான் எங்கள் பிரான்
                     -
இரண்டாந்திருவந்தாதி - 96


அத்தியூர் எனப்படும் திருக்காஞ்சி நகரில் கோயில் கொண்டுள்ள வரதராஜப் பெருமாளை (தேவராஜன்) மங்களாசாசனம் செய்கிறார், ஆழ்வார். திருவரங்கம் (கோயில்), திருவேங்கடத்திற்கு (திருமலை) அடுத்து மிகுந்த சிறப்பு மிக்க திவ்யதேசமிது. பெருமாள் கோயில் என்றும், விஷ்ணு காஞ்சியென்றும், அத்திகிரியென்றும், வேதகிரி, திருக்கச்சி என்றும் போற்றப்படுகிற திருத்தலமாகும்.

இத்திருத்தலம் திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், சுவாமி தேசிகன், மணவாள மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி என பல வைணவ ஆச்சார்யன்கள் உகந்து போற்றித் துதித்தவன் தேவராஜன் எனும் வரதன்.

மூலவர்
ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள்,
அத்தியூரான் என்று பல திருநாமங்கள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்
பெருந்தேவித் தாயார்

விமானம்
புண்ணியகோடி விமானம்

ஐராவதம் என்ற யானையே மலை வடிவங் கொண்டு எம்பெருமானைத் தாங்கி நிற்பதான பழங்கதையை ஒட்டி அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது. க என்றால் பிரம்மன், அஞ்சிரம் என்றால் பூசிக்கப்படல் என்பதாலும், கஞ்சிரம் என்றாகி கஞ்சிதபுரியாகி காலப்போக்கில் மருவி காஞ்சிபுரம் ஆயிற்று என்ற வழக்குண்டு. பக்தர்களுக்குக் கேட்கும் வரமெல்லாம் அளிக்கும் எம்பெருமானுக்கு #வரதர் எனும் திருநாமம் பொருத்தமே.

பல்லவ மன்னவர்களும், விஜய நகர மன்னர்களும் இத்தலத்திற்குப் பெருந் தொண்டாற்றியுள்ளனர். கிழக்கு கோபுரம் கிருஷ்ண தேவராயராலும், மேற்கு கோபுரம் பல்லவர்களாலும் கட்டப்பட்டதாகும். பல்லவர்களின் அழகிய கலைச்சிற்பங்களை கோயிலில் காண முடிகிறது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னவர்களின் தலைநகரமாக காஞ்சி விளங்கியது. கிருஷ்ண தேவராயர் புண்ணியகோடி விமானத்தில் பல சிற்ப வேலைகள் செய்வித்தார். அச்சுத தேவராயர் எடைக்கெடை தங்கம் தந்தார். சோழ மன்னர்களும் பல திருப்பணிகள் செய்துள்ளனர். திருமலை நாயக்கரும் விலை மதிப்பில்லா அணிகலன்களை இப்பெருமாளுக்கு அணிவித்துள்ளார்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாகக் கருடசேவை, பிரசத்தி பெற்ற ஒன்று. இங்கு தோன்றிய திருக்கச்சி நம்பிகள், ராமனுஜருக்கு குரு. நம்மாழ்வார் தமது திருவாய் மொழி முதல் பாசுரத்தில் ”அயர்வறு அமரர்கள் அதிபதி எவனவன்” என்றது இப்பெருமாளைத் தான் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு. இப்பெருமானைத் திருக்கச்சி நம்பிகள் தேவராஜஷ்டகம் என்னும் தோத்திரத்தாலும், வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாசத் என்னும் தோத்திரத்தாலும், மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களம் என்னும் தோத்திரத்தாலும் துதித்துப் போற்றியுள்ளனர்.

இங்குள்ள குளத்தில் மூழ்கியிருக்கும் #அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்திமரத்தாலான மூர்த்தியை 40 வருடங்கட்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளச் செய்வது மரபு, 10 தினங்கட்குப் பொதுமக்கள் தரிசனத்திற்குப் பின் மீண்டும் குளத்திற்குச் சென்று விடுவார் அத்தி வரதர். 1979-க்குப் பிறகு, ஜூலை 15, 2019-ல் அத்திவரதர் மீண்டும் நமக்குக் காட்சியளிப்பார்

பிரம்மன் செய்த யாகத்தில் தீப்பிழம்பாக தேவப்பெருமாள் காட்சி அளித்ததாக பழங்கதை ஒன்றுண்டு. இங்குள்ள உத்சவரின் திருமுகத்தில் அக்னியின் வடுக்கள் போன்ற புள்ளிகளைக் காணலாம்.

பெருந்தேவனார் என்ற சங்ககாலப் புலவர்

     ‘தேனோங்கு நீழற் திருவேங்கட மென்னும்
          வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்குந்
     தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
          சொன்னார்க்கு உண்டோ துயர்’


எனப் பாடியிருப்பதை வைத்து, சங்க காலத்திலேயே இத்தலம் சிறப்புற்றிருந்ததை உணர முடிகிறது.

அத்தியூரான் - அத்தியூர் எனும் திருக்காஞ்சியில் எழுந்தருளி இருப்பவனும்
புள்ளை யூர்வான் - கருடனாகிய பறவையை வாகனமாகக் கொண்டு உலா வருபவனும்
அணிமணியின் - அழகார்ந்த மணிகளுடன் கூடிய
துத்திசேர் நாகத்தின் மேல் - படத்தில் பொறிகளுடன் ஆன நாகமான அனந்தன் எனும் ஆதிசேடன் மீது
துயில்வான் - அறிதுயில் (யோக நித்திரை) புரிபவனும்
மூத்தீ - யாகத்தில் மூன்று வகை நெருப்புகளாக தோன்றுபவனும்.
மறையாவான் - நால் வேதங்களுக்குப் பொருளானவனும்
மாகடல் நஞ்சுண்டான் தனக்கும் - திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சை உண்ட சிவனுக்கும்
இறையாவான் எங்கள் பிரான் - இறையானவனும் தான் நாங்கள் பூசிக்கும் தலைவன்


”மூத்தீ மறையாவான்” என்பதை “முத்தி மறையாவான்” என்று கொண்டால், முக்தி எனும் மோட்சத்தை அருளவல்ல நான்மறைகளில் உறைந்திருப்பவன் என்று பொருள் கொள்வதில் ஒரு நயம் உள்ளது.

---எ.அ. பாலா

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails